புதன், 21 பிப்ரவரி, 2018

காதல் வனம் :- பாகம் 14. அழகியை மீட்ட அழகி.


காதல் வனம் :- பாகம் 14. அழகியை மீட்ட அழகி.

”காதல் என்பது எதுவரை.. கல்யாண காலம் வரும்வரை”  என்று ஜெமினியும் சந்திரபாபுவும் பாடி ஆடிக்கொண்டிருந்தார்கள். யானைகள் செயின்போலக் கோர்த்தும் வரிசையாகவும் தும்பிக்கை பிடித்தும் அசைந்தாடி வந்துகொண்டிருந்தன. அழகியின் தந்தை செந்தில்நாதன் முகமலர்ச்சியோடும் சிறிது கவலையோடும் அமர்ந்திருந்தார்.

அவர் கையசைக்கவும் ஹாலில் இருந்த டிவியை ரிமோட் கொண்டு அணைத்துவிட்டுச் சென்றான் பணியாள். அவரது மனைவியும் மகனும் கூட அமர்ந்திருந்தார்கள். அழகி தெளிவில்லாத முகத்தோடு நீரில் நனைந்து கசங்கிய ஒரு பூங்கொத்துப் போல அமர்ந்திருந்தாள். இன்னும் கூட ஹார்மோன்களை இசைபாடத் தூண்டும் அவளது அழகு ஸாமுக்குப் பிரமிப்பூட்டியது. 

கல்யாணகாலம் வரும்வரைதானா காதல்.. என யோசித்தபடி செந்தில்நாதன் அருகில் அமர்ந்திருந்தார் ஸாம். அவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியாகவும் சிறிது குழப்பமாகவும் இருந்தது. அழகியுடனான காதல் வாழ்வு.. எத்தனை நாள் ஏக்கம். நாள்கடந்து கிடைத்த வரம். அவரை வெறுமையாக்கியதோடு சிறிது அயர்வையும் தந்தது.

திங்கள், 19 பிப்ரவரி, 2018

ஈசனுக்குத் தாயானவள். தினமலர் சிறுவர்மலர் - 6.

அப்பனுக்கே அம்மையானவள்.

யார் இந்தப் பெண்.?. பேயுரு எடுத்தாற்போல் தலைகீழாய் கைகளால் கைலாயத்தில் ஏறி வருகிறாளே. பார்க்கவே பீதியூட்டும் நரம்பும் தோலும் எலும்புமான இப்பெண்ணைப் பார்த்துப் பரிவோடும் பாசத்தோடும் முக்காலமும் உணர்ந்த சிவ பெருமான் “அம்மையே வருக “ என்றழைக்கிறாரே. 

ஆதி அந்தம் அற்ற சிவனுக்கும் தாயான இவள் யார். ? சிவபூதகணம் போல் இவள் இப்படி ஆனது எப்படி ?

ஒரு மாங்கனி அவளை இப்படி ஞானப்பெணாக்கியது என்று நம்ப முடியுமா .. அது என்ன என்பதைத் தெரிந்துகொள்ள நாம் காரைவனம் என்னும் மாநகருக்குச் செல்லவேண்டும்.

காரைமாநகரில் தனதத்தன் தர்மவதி என்ற தம்பதிகள் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு அழகான ஒரு பெண்குழந்தை பிறந்தது. அவளுக்குப் புனிதவதி என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். சிவபூசனையில் ஈடுபாடு உள்ள குடும்பம் என்பதால் புனிதவதியும் சிவபக்தையாகவே வளர்ந்தார். உரிய பருவத்தில் அவருக்கும் பரமதத்தன் என்பவருக்கும் திருமணம் செய்வித்து மகிழ்ந்தார்கள் புனிதவதியின் பெற்றோர்.

தனியே ஒரு இல்லத்தில் புதுமணத் தம்பதிகள் வசித்து வந்தபோது பரமதத்தன் இரு மாங்கனிகளை வாங்கித் தனது இல்லத்துக்குக் கொடுத்தனுப்பினார். அவற்றை வாங்கி வைத்த புனிதவதி சமையலில் ஈடுபட்டார்.

சனி, 17 பிப்ரவரி, 2018

காரைக்குடி மரப்பாச்சியில் எனது நூல்கள்.

காரைக்குடி புத்தகத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பேராசிரியர் அய்க்கண், லயன் வெங்கடாசலம் ஆகியோரின் முன்னெடுப்பில் வருடாவருடம் இத்திருவிழா களைகட்டிவிடுகிறது. இன்னும் சில இலக்கிய ஆர்வலர்களின் பங்களிப்பும் புத்தக வாசிப்பை மேம்படுத்துவதோடு புத்தகம் வெளியிட கிரியா ஊக்கியாகவும் அமைகிறது.

அரிமழம் வைத்திய சாலையின் ஆயுர்வேத டாக்டர் சுனில் கிருஷ்ணன் காந்திய காலத்துக்கொரு பாலம் என்ற நூலில் ஆசிரியர். அவர் காரைக்குடி புத்தகத் திருவிழாக்களின் போது தன்னார்வலராக புத்தக ஸ்டால்களை நிறுவி இலக்கிய புத்தகங்களை வெகுஜன வாசிப்புக்குக் கொண்டு செல்வது வருடா வருடம் காணும் காட்சி. இந்த வருடம் மரப்பாச்சி என்ற அவருடைய ஸ்டாலுக்குச் சென்றிருந்தேன்.

காந்திய நூல்கள் அதிகம்,நவீன இலக்கிய நூல்களின் புது வெளியீடுகளும் அதிகம் உள்ளன. இன்பாவின் வையாசி படித்தீர்களா எனக் கேட்டார். ( பாதி படித்திருக்கிறேன். மீதி படிக்கவேண்டும் என்றேன் . :)

பல்லாண்டுகளுக்கு முன்பே வலைப்பதிவு மூலம் அவர் அறிமுகமாகி இருந்தாலும் ( 2009 ) இன்றுதான் நேரில் சந்தித்தேன். அவரது ஸ்டாலில் எனது புத்தகங்களைக் கொடுத்து விட்டு எனது வாசிப்புக்காக ஹாருகி முரகாமியின் கினோ, மனோஜ் குரூரின் நிலம் பூத்து மலர்ந்த நாள், மிரோஸ்லாவ் ஹோலுபின் கவிதைகள், காஃப்காவின் உருமாற்றம், தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் ஆகியன வாங்கி வந்தேன். 
எனது அன்னபட்சியை அங்கே வந்தவுடன் எடுத்து உடனே வாசிக்கத் தொடங்கிய ஒரு புத்தகப் பிரியையை அவர் அனுமதியோடு படம் எடுத்தேன் :)

வெள்ளி, 16 பிப்ரவரி, 2018

கண்ணுக்குக் கண் கொடுக்கும் அன்பு. தினமலர் சிறுவர்மலர். - 5.

கண்ணுக்குக்  கண் கொடுக்கும் அன்பு.  


வேடனாய் இருந்தாலென்ன விருத்தனாய் இருந்தாலென்ன. பக்தியால் அவனும் நாயன்மாரில் ஒருவராக ஆகமுடியும் என்பதைக் கூறுவது திண்ணனின் கதை.

அது யார் திண்ணன். ? அவன் உடுப்பூர் என்னும் ஊரிலிருந்த நாகனார் என்ற வேட்டுவரின் மகன். சிவனடியார்களைப்போல சிவனை அகமும் புறமும் தொழுது ஐந்தே நாட்களில் சிவனிடம் ஐக்கியமானவன். அவன் தன் அன்பின் முன் பரம்பொருளையும் மெய்மறக்கச் செய்தவன். பக்தியாலும் பாசத்தாலும் தன் கண்ணையே அகழ்ந்து தந்தவன்.

பிறப்பு சாதி இனம் இவை யாவும் கடவுளுக்கு முன் சமம். அன்பும் ப்ரேமையும் பக்தியுமே அவரை அடையும் யுக்தி என்பதைச் சொல்ல வருகிறது இக்கதை.

காளகஸ்தி என்னும் ஊரில் மலைமேல் ஒரு சிவன் கோவிலிருந்தது. அந்த இறைவன் பெயர் குடுமித்தேவர். சிவகோசாரியார் என்பார் தினம் வந்து ஆகம முறைப்படி திருமஞ்சனம் செய்வித்து, வில்வம் கொண்டு பூஜை புனஸ்காரங்கள் செய்து, திருவமுது படைத்துச் செல்வார்.

வியாழன், 15 பிப்ரவரி, 2018

எங்கும் நிறைந்திருக்கும் இறைவன். தினமலர் சிறுவர்மலர் - 4.

எங்கும் நிறைந்திருக்கும் இறைவன்.த்யயுகம் இது. இந்த யுகத்திலும் அசுரர்களும் அவர்களால் தொல்லைகளும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. யாரோ ஒரு அசுரக் குழந்தை என்னை அழைக்கிறது. அசுர நாவில் தெய்வத் திருநாமம்.

”எங்கும் நிறைந்திருக்கும் இறைவா இங்கே காட்சி கொடு” என்கிறது மழலைக் குரல். நானும் அசுரனும் தேவனுமாய், மனிதனும் மிருகமுமாய்க் கிளர்ந்தெழுகிறேன். மெல்ல மெல்ல எனக்குச் சிங்கமுகமும் பதினாறு கரங்களும் முளைக்கின்றன. பிடரி மயிர்கள் சிலிர்த்தெழுகின்றன.,,எல்லாம் ஒரு நொடிக்குள். இந்த அவதாரத்தை நான் தீர்மானிக்கவேயில்லை. கடவுள் பாதி மிருகம் பாதியாய் அது அவனால் நிகழ்ந்துவிட்டது.   

“நாராயணா நாராயணா” என்ற பிஞ்சுக்குரல் என் மனமெங்கும் மோதி என்னைக் கட்டி இழுக்கிறது. வெல்லப்பாகாய் என்னை உருகச் செய்கிறது. யாரோ ஒரு அரக்கன் கோட்டை கொத்தளங்களை உடைக்கிறான்.

“இங்கே இருக்கிறானா.. உன் இறைவன்,?. இங்கே இருக்கிறானா உன் இறைவன்..?” என்று அச்சிறுவனிடம் கேட்டபடி கோட்டையை தன் முரட்டுக் கதாயுதத்தால் உடைத்துச் சிதறடிக்கிறான் அந்த அசுரன்.

“ஆமாம் தந்தையே அவன் தூணிலும் இருப்பான் , அந்தத் துரும்பிலும் இருப்பான் ” என்கிறான்.
Related Posts Plugin for WordPress, Blogger...